காக்கா குஞ்சு
இந்த விளையாட்டில் காக்காவாக ஒருவரும், காக்கா விரட்டியாக ஒருவரும் இருக்க வேண்டும். மற்றவர்கள் காக்கா குஞ்சுகள்.
முதலில் யாரையாவது ஒருவரை காக்காவாக தேர்வு செய்த பிறகு, விளையாட்டை தொடங்கிவிடலாம். விளையாடுவதற்கு ஏதுவாக, குட்டையான, நிறைய கிளைகள் உள்ள மரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காக்கா குஞ்சுகள், மரக்கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
காக்கா விரட்டியும், காக்காவும் மரத்துக்கு கீழே நிற்க வேண்டும். அங்கு, ஒரு வட்டத்தைப் போட்டு, அதில் ஒரு குச்சியை வைக்க வேண்டும். 'ஜூட்’ சொன்னதும், காக்கா விரட்டியாக இருக்கும் சிறுவன், குச்சியை எடுத்து, காலுக்கு இடையில் கொண்டு சென்று குச்சியை வேகமாக தூர எறிய வேண்டும். அந்தக் குச்சியை எடுத்து வர, காக்கா சிறுவன் வேகமாக ஓட வேண்டும். அதற்குள் காக்கா விரட்டி சிறுவனும், மரத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்.
குச்சியோடு திரும்பி வரும் காக்கா சிறுவன், அதை வட்டத்தில் மீண்டும் வைத்துவிட்டு, வேகமாக மரத்தில் ஏறி, ஏதேனும் காக்கா குஞ்சு சிறுவனை தொட வேண்டும். ஆனால், குஞ்சுகள் அவ்வளவு சீக்கிரம் அகப்பட மாட்டார்கள் அல்லவா?. அவர்கள், மரக்கிளைகளின் மேலே ஏறி இன்னும் போக்குக்காட்டுவார்கள்.
அதுமட்டுமல்ல; யாரேனும் ஒருவர் காக்காவாக இருக்கும் நபரின் கையில் சிக்காமல், வட்டத்தில் இருக்கும் குச்சியைத் தொட்டு விடலாம். அப்படித் தொட்டுவிட்டால், காக்காவாக இருக்கும் நபர், வேறு யாரையும் தொடக்கூடாது. மீண்டும் குச்சி வீசப்படும். அந்தக் குச்சியை எடுத்து வந்து, வட்டத்துக்குள் போட்டுவிட்டுத்தான் வேறு நபரைத் தொட முடியும்.
குச்சியை யாரும் எடுப்பதற்குள் காக்கா சிறுவன், ஏதேனும் ஒரு காக்கைக் குஞ்சைத் தொட்டுவிட்டால், அவர் அவுட். இனி அந்தச் சிறுவன் காக்காவாக விளையாட்டைத் தொடர வேண்டும்.
இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டு மானாலும் விளையாடலாம். நகரத்தில் வாழும் சிறுவர்களுக்கு, மரம் கிடைக்காவிட்டால், அதற்கு பதில் வீடுகளிலோ, அடுக்குமாடி குடியிருப்புகளிலோ ஆங்காங்கே ஒளிந்து விளையாடலாம்.
↔– மு.கோபி
Comments
Post a Comment