பட்டையை கிளப்பும் பம்பரம்
பம்பரம் சுற்ற தேவையானவை
1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம்
2. பம்பரம் சுழற்றத் தேவையான சாட்டைக் கயிறு
பம்பரம் கற்றுக்கொள்ள சிறுவர்களுக்கான எளிய வழி
பம்பரத்தில் கயிற்றைச் சுற்றி, பம்பரத்தைக் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
பம்பரக் கயிற்றின் ஒருமுனையை, கட்டைவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குனிந்த நிலையில் நின்று, பம்பரம் உள்ள கையை கோழி விரட்டுவது போல், நல்ல வேகமாக முன்பக்கம் கொண்டு சென்று அதே வேகத்தில் கையை பின்பக்கம் கொண்டுவர வேண்டும். பின்பக்கம் கையை இழுக்கும்போது, பம்பரக் கயிற்றை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு, பம்பரக் கட்டையை சுழற்றி விட வேண்டும்.
பம்பரம் தரையில் பட்டு, கயிற்றின் மூலம் கிடைத்த விசையால் சுற்றும்.
பம்பரம் விளையாடும் முறை
பம்பர விளையாட்டிற்கு, இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறை எதுவுமில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதில் மூன்று வகையான பம்பரம் விடும் முறை உண்டு: ஒன்று இழுப்பு, இரண்டு சாட்டை, மூன்று குத்து.
முதலில் தரையில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ள வேண்டும். வட்டத்தைச் சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்குத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒன்று, இரண்டு, மூன்று சொல்லி முடித்தவுடன் அனைவரும் சாட்டையை விடுவித்து பம்பரத்தைச் சுழலவிட வேண்டும். இதுவே இழுப்பு முறை.
இப்போது, தரையில் சுற்றிக்கொண்டிருக்கும் பம்பரத்தை, சாட்டையைப் பயன்படுத்தி கையால் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடிப்பதை, ‘அப்பீட்டு’ என்று சொல்வார்கள். அவ்வாறு பம்பரங்களைச் சாட்டையால் எடுக்க முடியாதவர்கள், பம்பரங்களை இழந்தவர்கள் ஆவர். அவர்கள், வட்டத்தின் உள்ளே தங்கள் பம்பரங்களை வைத்துவிட வேண்டும்.
பம்பரங்களைச் சரியாக பிடித்தவர்கள், வட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பம்பரங்களை அடித்து, அவற்றை வட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்துவிட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.
ஒருவேளை, பம்பரங்கள் வட்டத்தினுள் சுழலும்போது, பம்பரத்தை இழந்தவர் அதை அமுக்கி பிடித்துவிட்டால், சுழலவிட்டவரின் பம்பரமும் வட்டத்திற்குள் வைக்கப்படும். இதேபோல், பம்பரம் விட்டு அது சுழலவில்லை என்றாலும், வட்டத்தினுள் வைக்கப்படும்.
இரண்டாவது, சாட்டை வகை. இதில் பம்பரத்தைத் தரையில் விடாமல், தோள் அளவுக்கு உயர்த்தி, சாட்டையைச் சொடுக்கி, பம்பரத்தை உள்ளங்கையில் ஏந்திக்கொள்வதே இதன் சிறப்பு.
மூன்றாவது வகையான குத்து முறையில், தலைக்குமேல் பம்பரத்தை உயர்த்தி, வட்டத்தில் இருக்கும் பிறரின் பம்பரங்களைக் குறிபார்த்து அடித்து, உடைக்கவேண்டும். காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், இந்த முறையைத் தவிர்ப்பது நலம்.
Comments
Post a Comment