கிச்சு கிச்சு தம்பலம்… கிய்யா கிய்யா தம்பலம்...
- இருவர் ஆடும் இவ்விளையாட்டில், ஒருவர் மற்றவரை எதிர்நோக்கி அமர்ந்துகொள்ள வேண்டும்.
- தமக்கிடையே, ஒன்றரை அடி நீளத்துக்கு மணலை நீளவாக்கில் குவித்துவைக்க வேண்டும்.
- ஒரு அங்குல சிறிய குச்சி (துரும்பு) ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
விளையாட்டை ஆரம்பிக்கும்போது,
கிச்சு கிச்சு தம்பலம்… கிய்யா கிய்யா தம்பலம்..
மச்சு மச்சு தம்பலம் மாயா மாயா தம்பலம்
என்று சொல்லிக்கொண்டே, யாராவது ஒருவர் குச்சியை, மணலுக்குள்ளே மறைத்து வைக்க வேண்டும். மறைக்கும்போது, எதிராளிக்கு தெரியாவண்ணம், குச்சியை மண்ணுக்குள் புதைத்து, அதை முன்னும் பின்னும் கொண்டு செல்ல வேண்டும். எதிராளி குழம்பும் வகையில் பாவனை காட்டிவிட்டு, குச்சியை மணலுக்குள் மறைத்து வைத்துவிட வேண்டும்.
குச்சி இருக்கும் இடத்தைத் தீவிரமாக கவனித்துக் கொண்டிருக்கும் எதிரில் இருப்பவர், குச்சி இங்குதான் இருக்கும் என்று ஏதேனும் ஓர் இடத்தை ஊகம் செய்துகொள்ள வேண்டும். எந்த இடத்தில், அந்தக் குச்சி மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கருதுகிறாரோ, அந்த இடத்தின் மேல், தமது இரு கைகளை கோத்து மூட வேண்டும்.
இப்போது, குச்சியைத் தேடும் நேரம். கை வைத்த இடத்தின் கீழ் குச்சி இல்லாமல், வேறு இடத்தில் இருந்தால், மறைத்து வைத்தவர் வெற்றி பெற்றவர் ஆகிறார். அதே, கைக்குக்கீழ் அந்த குச்சி இருந்தது என்றால், அவர் வென்றவர் ஆவார். யார் வெல்கிறாரோ, அவருக்குக் குச்சியை ஒளித்து வைக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இப்படியே, ஒளித்து கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாடலாம்.
Comments
Post a Comment