ராஜா, ராணி, போலீஸ், திருடன்



கொளுத்தும் கோடை வெயிலில் வெளியில் சென்று காயாமல், வீட்டுக்குள் இருந்தே விளையாடும் ஆட்டம் ராஜா, ராணி, மந்திரி, திருடன் போலீஸ் ஆகும்.

இவ்விளையாட்டுக்கு, நான்கு அல்லது ஐந்து பேர் தேவை. ஒரு காகிதத்தை எடுத்து, சம அளவிலான ஐந்து சீட்டாக கிழித்துக் கொள்ளுங்கள். ஒன்றில் ராஜா, மற்றொன்றில் ராணி, இன்னொன்றில் மந்திரி, அடுத்ததில் போலீஸ், அதற்கடுத்ததில் திருடன் என்று எழுதிக்கொள்ளுங்கள். அதில், ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ராஜாவுக்கு 1000 புள்ளிகள். ராணிக்கு 750, மந்திரிக்கு 500, போலீசுக்கு 250, திருடனுக்கு பூஜ்ஜியம் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது சீட்டுகளை ஒரே மாதிரியாக மடித்துக்கொள்ளுங்கள். அதை குலுக்கி கலைத்துப் போட்டால், அதை எழுதி மடித்தவரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்க வேண்டும்.

யாராவது ஒருவர் ஐந்து சீட்டுகளையும் நன்றாக குலுக்கி தரையில் போடவும். ஆளுக்கொரு சீட்டை எடுத்துக்கொள்ளவும். தன்னுடைய சீட்டில் என்ன வந்திருக்கிறது என்பதை அடுத்தவருக்கு தெரியாமல் திறந்து பார்க்கவும்.

இதில், ராஜா சீட்டு வைத்திருப்பவர், ராணி யார் எனக் கண்டுபிடிக்க வேண்டும். சரியான நபரைக் கண்டுபிடித்துவிட்டால், அவர்தான் ராஜா. தவறான ஆளாக இருந்தால், அவரிடம் உள்ள சீட்டை வாங்கிக் கொண்டு, ராஜா சீட்டை அவருக்குக் கொடுக்க வேண்டும். தவறான சீட்டாக இருந்தாலும், யாரும், யாரிடமும் என்ன வந்திருக்கிறது என கூறக்கூடாது.

ராஜா சீட்டு வைத்திருப்பவர், ராணியையும்; ராணி, மந்திரியையும்; மந்திரி, போலீசையும், போலீஸ் திருடனையும் கண்டுபிடிக்க வேண்டும். சரியான நபரை அடையாளம் கண்டுவிட்டால், அந்தச் சீட்டை அவரே வைத்துக் கொண்டு, அதற்கான புள்ளிகளை முழுமையாகப் பெற்று விடலாம். தவறாகக் கூறினால், சீட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். சீட்டை மாற்றிக் கொண்டவர், சரியான நபரை அடையாளம் காண வேண்டும். இப்படி, திருடன் வரை கண்டுபிடித்த பிறகு, மீண்டும் குலுக்கிப் போட்டு விளையாடலாம்.

இந்த புள்ளிகளை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டே வந்து, 10 அல்லது 15 சுற்றுகளுக்குப் பிறகு கூட்டிப் பார்த்து, யாருடையது அதிகமோ அவரே வென்றவர். நான்கு பேர் மட்டும் இருந்தால், மந்திரி இல்லாமல் விளையாடலாம்.

↔↔– கோபி

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....