சின்னப் பூவே மெல்லக் கிள்ளு!



சில விளையாட்டுகளை எத்தனை முறை விளையாடினாலும் அலுக்காது. அதுபோன்ற ஒன்றுதான், ‘மெல்ல வந்து கிள்ளிப் போ’ விளையாட்டு. ஊகிக்கும் திறனை மேம்படுத்துவதே இந்த விளையாட்டின் சிறப்பம்சம்.

இரண்டு அணிகள் விளையாடும் இவ்விளையாட்டில், ஒவ்வொரு அணியிலும், 5 லிருந்து 10 நபர்கள் வரை இருக்கலாம். உதாரணத்திற்கு, மொத்தம் 14 பேர் இருக்கிறோம் என்றால், தலா ஏழு, ஏழாக ‘ஏ’ மற்றும்‘பி’ அணி என பிரிந்து கொள்ள வேண்டும். இப்போது,‘ஏ’ அணிக்கு சரவணனும்,‘பி’ அணிக்கு சாய்ராவும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது சரவணன், தனது அணியில் உள்ள 6 பேருக்கும், ரகசிய பெயரை சூட்ட வேண்டும்.

அவை, மலர்கள், பழங்கள், மரங்கள், பிரபலங்கள் என்று எந்த வகைப் பெயர்களாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, மலரின் பெயர்களைச் சூட்ட சரவணன் முடிவு செய்தால், ரோஜாப்பூ, மல்லிகை, செம்பருத்தி, அல்லி, தாமரை மற்றும் சூரியகாந்தி என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பெயர் சூட்ட வேண்டும். இதேபோல் சாய்ராவும் தனது அணியினருக்கு ரகசிய பெயர்களைச் சூட்ட வேண்டும். கண்டிப்பாக, யாருக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று எதிரணியினருக்கு தெரியக்கூடாது.

தற்போது விளையாட்டை ஆரம்பிக்கலாம். இரு அணியினரும், எதிர் எதிரே வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும். இரு அணிக்குமான இடைவெளி அதிகம் இருப்பது நல்லது. பூவா தலையா டாஸ் (Toss) மூலம், யாருடைய அணி முதலில் விளையாடப்போகிறது என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். சரவணனுடைய அணி டாசில் வெல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

சரவணன், சாய்ராவின் அணியிலிருந்து ஒருவரைத் தேர்வுசெய்து, அவருடைய கண்ணை இறுகப் பொத்த வேண்டும். மற்றவர்கள் கீழே குனிந்து கொள்ள வேண்டும். இப்போது, சரவணன், ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்போ’ என்பார். யார் ரோஜாவோ, அவர் வந்து கண்பொத்தப்பட்டிருப்பவரை நைசாக கிள்ளிவிட்டு, மீண்டும் போய் ஒன்றும் தெரியாத பிள்ளை போல் தனது இடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். பின்னர், சரவணன் கண்கட்டை அவிழ்த்து விடுவார். இதுதான் விளையாட்டின் முக்கியப் பகுதி. கண் பொத்தப்பட்டிருந்தவர் கண்ணைத் திறந்து பார்த்து, யார் தன்னை நறுக்கென்று கிள்ளி விட்டுப் போனவர் என்பதை ஊகிக்க வேண்டும்.

யார் திருட்டு முழி முழிக்கிறாரோ, யார் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறாரோ, யார் பதற்றமாக இருக்கிறாரோ அவர்தான் கிள்ளியிருப்பார் என்று ஊகிக்க சில வழிகள் உள்ளன. இப்படியாக, தன்னை கிள்ளிய ரோஜா, இவர்தான் என்று கணித்து அடையாளம் காட்ட வேண்டும். அதேசமயம், தனது அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், சாய்ராவின் அணியினர் கண் பொத்தப்பட்டவருக்கு, யார் கிள்ளினார்கள் என்பதைச் சொல்லவோ, குறிப்பாகக் காட்டவோ கூடாது.

கண்பொத்தப்பட்டவர் ஒருவேளை, ரோஜாவை சரியாக இனம் கண்டுவிட்டால், சாய்ராவின் அணி வெற்றி பெற்றுவிடும். பின்னர், சரவணன் அணியில் ஒருவரைத தேர்வு செய்து கண்ணைப் பொத்தி கிள்ளலாம். மாற்றி தவறாகச் சொன்னால், மீண்டும் சரவணன் அணி,சாய்ரா அணியிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, கண்ணைப் பொத்தி கிள்ளி விளையாடும். எவ்வளவு விளையாடினாலும், சலிப்பூட்டாத இவ்விளையாட்டை விளையாடிப் பார்ப்போமா?!

(கொஞ்சம் ஜாக்கிரதையாக கிள்ளுங்கள். அதிகம் வலித்துவிடப் போகிறது)

– மு.கோபி

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....