ஓடி ஓடி விளையாடு
இந்த விளையாட்டுக்கு, திறந்தவெளி மைதானம் தான் ஏற்ற இடம். இடத்தைப் பொறுத்து, 10 லிருந்து 20 பேர் வரை விளையாடலாம். மற்றவர்களை துரத்திப்பிடித்து அவுட் ஆக்குவதுதான், விளையாட்டின் சாராம்சம்.
யார் முதலில் துரத்தப்போகிறார் என்று முடிவு செய்துகொண்டு, ‘ஜூட்’ என்று சொன்னதும், மற்றவர்கள் ஓட வேண்டும். திறந்தவெளி இடமாக இருப்பதால், ஓடுபவர்களால் வேகமாக ஓட முடியும். ஓடுபவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி, துரத்திப் பிடிப்பவருக்கு போக்குக் காட்ட வேண்டும். துரத்திப் பிடிப்பவர் நெருங்கும்போது, ஓடிக்கொண்டிருப்பவர் ‘பாஸ்’ என்று சொல்லிவிட்டு கீழே உட்கார்ந்து கொள்ளலாம். அப்படி உட்கார்ந்தவர் பிடிக்கப்பட்டாலும், அவுட் ஆக மாட்டார். அதேசமயம், உட்கார்ந்தவரால் மறுபடியும் எழுந்து ஓட முடியாது. அவர் மறுபடியும் விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், வேறொரு நபர் வந்து உட்கார்ந்திருப்பவரின் தலையை தொட்டு, ரிலீஸ் செய்ய வேண்டும். அப்படி உதவி செய்வதற்காக யாராவது முன்வரும்போது, துரத்துபவரால் அவரைத் தொட்டு அவுட்டாக்க முடியும். இப்படியாக, பிறரை அவுட்டாக்கும் வரை துரத்துபவர் பிறரைத் துரத்த வேண்டும். அதன் பின்னர் அவுட்டானவர், மற்றவர்களைத் துரத்த ஆரம்பிப்பார். ஜாலியான இவ்விளையாட்டை, உடல் களைப்படையும் வரை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம்.
இதே விளையாட்டை,
உட்கார்ந்திருக்கும்போது தொடக்கூடாது
கும்பிட்டு நிற்பவரைத் தொடக்கூடாது
ஒருகாலைத் தூக்கிக்கொண்டு, அதற்குள் கையைவிட்டு, மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது.
தூணைப் பற்றி நிற்பவரைத் தொடக்கூடாது.
இருவர் கைகோத்து நிற்கும்போதோ தொட்டுக் கொண்டு நிற்கும்போதோ தொடக்கூடாது.
கையால் மண்ணைத் தொட்டுக்கொண்டு நிற்கும்போது தொடக்கூடாது.
கல்லில் கால் ஊன்றிக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது.
கல்லில் கம்பு ஊன்றிக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது.
நிழலில் நிற்பவரைத் தொடக்கூடாது
என, வெவ்வேறு விதிகளை வைத்துக் கொண்டும் விளையாடலாம்.
↔– மு.கோபி
Comments
Post a Comment