எலி என்ன செய்யுது?



இயற்கையில் எலியும், பூனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. அதையே விளையாட்டாக விளையாடினால்? அசல், டாம் அண்ட் ஜெர்ரிதான். விளையாடுவோமா...

பத்திலிருந்து பதினைந்து பேர், இவ்விளையாட்டுக்கு தேவை. இருவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாக கைகோர்த்து நின்று கொள்ள வேண்டும் (படத்தை பார்க்க). இப்போது எஞ்சியிருக்கும் இருவரில், ஒருவர் எலி, மற்றொருவர் பூனை. எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு உள்ளேயும் பூனையாக நடிப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் நின்று கொள்ள வேண்டும்.

இப்பொழுது பூனை, "என்ன செய்யுது எலி?" என்ற கேள்வியோடு பாடலைத் தொடங்க வேண்டும். அதற்கு வட்டமாக நிற்பவர்கள் "எலி தூங்குது"என்று பதில் பாட்டு பாட வேண்டும். எலியும் தூங்குவது போல் நடிக்க வேண்டும். மீண்டும் "எலி என்ன செய்யுது?" என்று பூனை வட்டத்தை சுற்றி சுற்றி வரும். அப்போது, எலியின் நடிப்புக்கு ஏற்ப "தூங்கி எழுந்திருக்கிறது, பல் தேய்க்கிறது, சாப்பிடுகிறது, சட்டை போடுகிறது" என்று வட்டமாக நிற்போர் பதில் கூறுவார்கள்.

கடைசியாக, "எலி வெளியே வரப் பார்க்கிறது" என்று அவர்கள் கூறுவார்கள். அப்போது, எலியைப் பிடிக்க பூனை தயாராகிவிடும். பூனை உள்ளே நுழைய முயற்சிக்கும். ஆனால், வட்டமாக நிற்பவர்கள், பூனை உள்ளே நுழைய முடியாதபடி, கைகளால் அரண் அமைத்து தடுப்பார்கள். அதையும் மீறி பூனை வட்டத்திற்குள் நுழைந்துவிட்டால், எலி வெளியே ஓடி விடும். மறுபடியும், பூனை வெளியே வந்தால், எலி வட்டத்திற்குள் ஓடிவிடும். வட்டத்தில் நிற்போர் எலிக்கு ஆதரவாகவும், பூனைக்கு எதிராகவும் செயல்படுவர். அதையும் மீறிப் பூனை எலியைப் பிடித்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும்.

இப்போது, வேறு இருவர் எலியும் பூனையுமாக மாறி விளையாட்டை தொடரலாம். யார் திறமையானவர் எலியா? பூனையா? என்று பலம் பார்ப்பதும், எலி, பூனை உள்ளிட்டோரின் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதும் இந்த விளையாட்டின் சிறப்பம்சம்.


மு.கோபி

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....