கல்லா, மண்ணா



கல்லா, மண்ணா விளையாட்டை, குறைந்தது ஐந்திலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.  வழக்கமாக சாட் பூட் த்ரீ போட்டுத்தான், யாரேனும் ஒருவரை பழமாக தேர்வு செய்வோம். அதை விட ஒரு ஜாலியான ஒரு முறை உள்ளது. பின்வரும் பாடலை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டால், விளையாட்டில் இன்னும் சுவை கூடும்.
பச்ச பாவக்கா…
பளபளங்க…
பழனி பச்ச…
மினுமினுங்க…
செங்கருட்டி…
செவத்தபுள்ள…
கின்னாவந்தா…
கினுகட்டி…
உடும்பு…
துடுப்பு…
மகா…
சுகா…
பால்....
பறங்கி....
எட்டுமன்...
குட்டுமல் ...
ஜல்

இதில், ஜல் என்ற வார்த்தை யார் மேல் முடிகிறதோ, அவர்தான் பழம்.
இப்போது, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவில் விளையாடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்குள்ள மண் தரையை, ‘மண்’ என்றும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை கல் என்றும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நம்மைத் துரத்திப் பிடிப்பவரிடம், மற்றவர்கள், ‘உனக்கு கல் வேண்டுமா, மண் வேண்டுமா? என்று கேட்க வேண்டும். ‘எனக்கு மண் வேண்டும்’ என்று அந்தச் சிறுவன் கூறிவிட்டால், மற்றவர்கள் மண்ணில் நிற்கக் கூடாது. அவர்கள், கல்லில் அதாவது நடைபாதையில் ஏறி நின்று கொள்ள வேண்டும். ஆனால், வெறுமனே கல்லில் ஏறி நின்றுவிட்டால் விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்காதல்லவா? எனவே, பழத்தை உசுப்பேற்றும் வகையில், மண்ணில் இறங்கி ஓடி, ‘என்னைப் பிடி பார்க்கலாம்’ என்பது போல் சீண்ட வேண்டும். இப்படியாக சிறுவர்கள் மண்ணிலும் கல்லிலும் மாறி மாறி ஓடி, விளையாட்டை இன்னும் விறுவிறுப்பாக்குவார்கள். ஒருவேளை, ஒரு கால் மண்ணிலும், ஒரு கால் கல்லிலும் இருக்கும்போது, பழம் உங்களை பிடித்துவிட்டால் என்ன செய்வது கேள்வி எழலாம். ‘ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால்’, அதனால் அவுட் கிடையாது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளுங்கள்...
சரி, பூங்கா இல்லாதவர்கள் என்ன செய்வது? வீட்டுத் தெரு, கார் பார்க்கிங் அல்லது மொட்டை மாடி போன்ற இடங்களிலும் விளையாடலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் செங்கற்களை ஆங்காங்கே வைத்து விட்டு, அதை கல் என்றும், வெறும் தரையை மண் என்றும் வைத்துக்கொண்டு ஆட வேண்டும்.

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....