என்ன பூ வேண்டும் நந்தவனத்தில்?


விளையாட்டை விளையாட, சமபலமுள்ள இருகுழுக்களாக சிறுமியர்கள் பிரிந்துகொள்ள வேண்டும்.  உதாரணத்திற்கு, இருகுழுக்களிலும் தலா 4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த இரு அணியில், ஒன்று பூப்பறிக்கும் குழு, மற்றொன்று பூக்குழு. பூக்குழு, தங்கள் அணியினர் ஒவ்வொருவருக்கும் பூவின் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும். இது பூப்பறிக்கும் குழுவுக்கு தெரியக்கூடாது.
இப்போது பூப்பறிக்கும் குழு, பின்வரும் பாடலை பாடி முன்னோக்கி வர வேண்டும்.
‘பூப்பறிக்க வருகிறோம் 
பூப்பறிக்க வருகிறோம் - நந்தவனத்தில்’ 
என்று பாட வேண்டும். அப்போது, எதிர்குழுவினர் பின்னோக்கி போக வேண்டும்.
அதன்பின்னர்,
“என்ன பூ வேண்டும் 
என்ன பூ வேண்டும் - நந்தவனத்தில் ”
என்று பதில் பாட்டு பாடிக்கொண்டே இவர்கள் முன்னோக்கி போக வேண்டும். பூப்பறிக்கும் குழு பின்னேறி செல்லும்.
 இந்த நிலையில், ஏதாவது பூவின் பெயரை,  பூப்பறிக்கும் குழு சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு,
‘மல்லிகை பூ வேண்டும் 
 மல்லிகை வேண்டும்’ 
என்று  பூப்பறிக்கும் குழு சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது, மல்லிகை பூ யாரோ அவர் பூக்குழு வரிசையின் முன்னால் வந்து நிற்க வேண்டும். கயிறு இழுக்கும் போட்டியில் நிற்பது போல், கோட்டுக்கு அந்த பக்கமும், இந்த பக்கமும் இரு அணியினரும் எதிர்நோக்கி நிற்க வேண்டும் (படத்தை பார்க்க). இரு அணியிலும், முன் நிற்கும் சிறுவர்கள் மட்டும், படத்தில் உள்ளது போல்  கையை கோர்த்து பிடித்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவர்களுக்கு பின்னால் நின்று இடுப்பை பிடித்து கொண்டு பக்கபலமாக நிற்பார்கள். இப்போது இரு அணியும் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டியும் தம் பக்கம் இழுக்க வேண்டும். தங்கள் பக்க எல்லைக்குள், மல்லிகை பூவை இழுத்துவிட்டால், மல்லிகை பூ பறிக்கப்பட்டதாக கணக்கு. அதாவது, பூப்பறிக்கும் குழுவுக்கு மல்லிகை பூ சொந்தமாகி விடும். மாறாக, பூக்குழு, பூப்பறிக்கும் குழுவிலிருந்து ஒரு ஆளை தம் பக்கம் இழுத்துவிட்டால், இழுக்கப்பட்ட சிறுமி, பூக்குழுவுக்கு சொந்தம். இப்போது, பறிக்கப்பட்ட பூவையும் தம் பக்கம் சேர்த்து கொண்டு, அடுத்த சுற்றை ஆட வேண்டும். இப்படியாக, பூக்குழுவோ அல்லது பூப்பறிக்கும் குழுவோ ஒட்டுமொத்தமாக காலி ஆகும் அளவுக்கு, தொடர்ந்து விளையாட வேண்டும்.
மு.கோபி

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....