கொக்கு பறக்கும்; ஆட்டோ பறக்குமா?

விளையாடத் தேவையான நபர்களின் எண்ணிக்கை
குறைந்தது நான்கிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளையாட்டின் சுவாரஸ்யம் கூடும்.
விளையாடத் தேவையான இடம், பொருள்
வீட்டுக்குள் உட்கார்ந்தும் விளையாடலாம்.  பொருள் எதுவும் தேவையில்லை.
விளையாடும் முறை
விளையாட்டுக் குழுவில் யாரேனும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தலைவர் உட்பட எல்லோரும் வட்டமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். அனைவரும் உள்ளங்கைகளை தரையோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
தலைவர் முதலில், காக்கா பற பற என்பார். உடனே மற்றவர்கள், பறவை பறப்பது போல்  கைவிரல்களை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.
இப்படியாக, கொக்கு பறபற, கோழி பறபற, மைனா பறபற என்று ஒவ்வொன்றாகச் சொல்லும்போது, குழுவில் உள்ள மற்றவர்களும் கைகளை பறப்பது போல் அசைக்க வேண்டும். திடீரென, தட்டு பறபற, ஆட்டோ பறபற, நாய் பறபற என்று ஏதேனும் பறக்காத பொருளைக் குறிப்பிட்டு, பறபற என்று தலைவர் சொல்வார். அப்படி பறக்காத பொருளைக் குறிப்பிட்டால், குழுவினர் யாரும் எந்த அசைவையும் மேற்கொள்ளக் கூடாது. கைகளை தரையோடு தரையாகத்தான் வைத்திருக்க வேண்டும். மாறாக, யார் தவறாக கைகளை பறப்பது போல் சைகை மேற்கொள்கிறாரோ, அவர் ஆட்டமிழந்து விட்டார். குழுவிலிருந்து வெளியேற வேண்டும்.
தலைவரின், கட்டளை இடும் வேகம் ஆரம்பத்தில் மெதுவாக இருக்கும். ஆனால், போகப் போக வேகமெடுக்கும். இதனால், மிகவும் உன்னிப்பாக கவனித்து, நமது கை அசைவுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாம் அவுட் ஆக வேண்டியதுதான். குழுவில் யார் கடைசிவரை எஞ்சியுள்ளாரோ, அவர்தான் வெற்றிபெற்றவர். அடுத்த சுற்று ஆட்டத்தை தலைமையேற்று, அவர் வழிநடத்துவார். எவ்வளவு வேகத்திலும், உன்னிப்புடன் கவனித்துச் செயல்படுதல் என்பதே விளையாட்டின் நோக்கம்.
– மு.கோபி

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....