கியா கியா குருவி நான்....


பாவனையை அடிப்படையாக கொண்ட இவ்விளையாட்டு குழுவாக ஆடப்படுகிறது. குறைந்தது 5 பேர் தேவை. இதில் ஒருவர் குருவியாகவும், மற்றவர்கள் தென்னை மரம், வாழை மரம், வேப்ப மரம் மற்றும் ஆல மரம் போன்று என்று நடிக்க வேண்டும்.  முதலில் சந்தோஷமாக வாழ்ந்த குருவி ஒன்றுக்கு, துன்ப நேரமாக அதன் இறக்கை ஒடிந்துவிடுகிறது. இப்போது, இறக்கை ஒடிந்த குருவி, ஒவ்வொரு மரமாக சென்று தஞ்சம் கேட்க வேண்டும். முதலில் வேப்ப மரத்திடம் சென்று,
கியா கியா குருவி நான்
கியா கியா குருவி நான்
முள்ளில் ஒரு குருவி வசித்து வந்தது
அதன் இறக்கை ஒடிந்து விட்டது
வேப்ப மரமே! வேப்ப மரமே...
சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா?
என்று பாட வேண்டும். அப்போது, வேப்ப மரம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மறுத்துவிட வேண்டும். பிறகு தென்னை மரத்திடம் போய், அதே பாட்டை பாட வேண்டும். ‘தென்னை மரமே, தென்னை மரமே, சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா?’ என்று கேட்கும்போது, தென்னை மரமும் சாக்குபோக்கு சொல்லி மறுத்துவிட வேண்டும். அடுத்து வாழை மரத்திடம் கேட்க வேண்டும். அதுவும் மறுத்துவிட்ட பின்னர், கடைசியாக ஆலமரத்திடம் செல்ல வேண்டும். ஆலமரமோ, குருவியிடம் ஆறுதலான வார்த்தைகளை சொல்லி, அடைக்கலம் தர ஒப்புக்கொள்ள வேண்டும்.
இப்போது, திடீரென சூறாவளி தோன்றுகிறது. அப்போது ஒவ்வொரு மரமாக குருவி பறந்து போக வேண்டும். முதலில் வேப்ப மரத்திடம் போய்,
காற்று மழை வீசுது, 
காற்று மழை வீசுது
வேப் மரம் வீழ்ந்தது
வேப்ப மரம் வீழ்ந்தது என்று  பாட வேண்டும். வேப்ப மரமும் வீழ்வது போல் கீழே சாய வேண்டும். அடுத்து,  காற்று மழை வீசுது, தென்னை மரம் வீழ்ந்தது, தென்னை மரம் வீழ்ந்தது என்று பாட, தென்னையும் வீழும். அடுத்து, வாழை மரமும் வீழ வேண்டும். இறுதியாக, ஆலமரத்திடம் சென்று,
காற்று மழை வீசுது,
காற்று மழை வீசுது, ஆனாலும்
ஆலமரம் அசைந்து அசைந்து ஆடுது 
என்று சந்தோஷமாக பாட வேண்டும்.
இது, உதவி செய்யும் குணமுள்ள மரம், சூறாவளியிலிருந்து காக்கப்பட்டதாகவும், சுயநலமாக இருந்த மற்ற மரங்கள் வீழ்ந்ததாகவும் பொருள்பட விளையாட்டு அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....